நடிகர்கள் மட்டும் போதைப் பொருளை பயன்படுத்தவில்லை! சாமானியர்கள் கூட போதை பொருளை பயன்படுத்துகிறார்கள்! நடிகை காயத்ரி ரகுராம்!

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மருத்துவரணி சார்பில் மதுரை சரவணா மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
அதிமுக மருத்துவ அணி இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை அதிமுக மகளிரணி துணைச்செயலாளரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் துவக்கி வைத்தார். 72 அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரத்த தானம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மகளிரணி துணைச்செயலாளர் காயத்திரி ரகுராம் கூறுகையில், "அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக நிறுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். நடிகர்கள் மட்டும் போதைப்பொருளை பயன்படுத்துவதில்லை, சாமானிய மக்கள் கூட போதைப் பொருளை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை மையப்படுத்தி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது.
திமுக மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை. திமுக மக்களின் பிரச்னைகளை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாக டாஸ்மாக் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை திராவிட மாடலாக மாற்ற முடியாது.அவரே ஒரு மாடல் போல தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியாது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரிக்கும்.ஆனால், மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவோம் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 72 வது பிறந்த நாளையோட்டி வருடந்தோறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆறுபடை முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது தற்போது ரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
ரோம்நகர் பற்றி எரியும்பொழுது மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தது போல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் செயல்பட்டு வருகிறார். 2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்து ஆட்சி அமைக்கப்படும் என கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
