கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு: திடுக்கிடும் தகவல்!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியை ஒருவன் பலாத்காரம் செய்த போது இருவர் வேடிக்கை பார்த்ததாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி, இன்னும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. அந்த கொடூரமான நிகழ்வின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை கிளறும் விதமாக, தற்போது நகரின் மற்றொரு முக்கிய கல்வி நிறுவனத்தில் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கல்வி கற்கச் செல்லும் இடங்களில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்ற அச்சத்தையும், வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் பயிலும் 24 வயது மாணவி ஒருவர், கடந்த புதன்கிழமை இரவு கல்லூரி வளாகத்திலேயே கொடூரமாகப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி கூட்டத்திற்குப் பிறகு, மூன்று நபர்கள் தன்னை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டியதாகக் கூறியுள்ளார். பின்னர் அந்த மாணவி, மேற்கண்ட மூன்று நபர்களிடம் கெஞ்சியதாகவும், கதறியதாகவும், அவர்களின் காலில் கூட விழுந்து அழுததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் அந்த மாணவியை விடவில்லை. அவர்கள் அடித்து தாக்கிய போது தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இன்ஹேலருக்காகக் கெஞ்சியதாகவும், பின்னர் அவர்கள் தன்னை மிரட்டி, காவலாளி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். காவலாளியை அறையிலிருந்து வெளியே விரட்டிவிட்டு, ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற இருவரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். மேலும், ஹாக்கி மட்டையால் தன்னைத் தாக்கியதாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் தன்னையும், தனது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் மனோஜித் மிஸ்ரா என்பவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்கட்சியான பாஜக, சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ஆளும் திரிணாமுல் அரசு குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், குற்றவாளி தங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழக்கில் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா (30), கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் பிரமித் முகர்ஜி (20), ஜைப் அகமது (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காலில் விழுந்தும் விடவில்லை
மூன்று நபர்கள் தன்னை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டியதாகவும், பின்னர் அவர்களிடம் தான் கெஞ்சியதாகவும், கதறியதாகவும், அவர்களின் காலில் கூட விழுந்து அழுததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் அவர்கள் அடித்து தாக்கிய போது தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் மாணவி கூறி உள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
