கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை: மதுரையில் பரபரப்பு!

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (63) மற்றும் கோவை சூலூர் அருகேயுள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்த கவிதாமணி (45) என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பாஸ்கரன் நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தவர். அவர் கவிதாமணியை இரண்டாவது திருமணமாக எடுத்துக்கொண்டு கோவையில் வாழ்ந்து வந்தார். கடந்த ஜூன் 1-ஆம் தேதி, மதுரை மாநகரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிகிச்சைக்காக வந்ததாக கூறி அறை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி அறையை காலி செய்ய வேண்டிய நாள் வந்ததால், விடுதி ஊழியர்கள் அறையை தட்டியபோதும் திறக்கவில்லை. பின்னர் மாற்றுச்சாவி கொண்டு திறந்தபோது, இருவரும் வாயில் நுரைத் தள்ளிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து கோ.புதூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அறையை சோதனை செய்த போலீசாருக்கு, தம்பதிகள் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்ததாகவும், உடல் நலம் மற்றும் மனநிலை சரியில்லாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அவர்களது அணிகலன்கள் கவிதாமணியின் மகன் கோகுலிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாதென்றும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
