கணவனைக் கொன்று நாடகம் ஆடிய பெண்: சினிமாவை மிஞ்சும் கிரைம்!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை மாளிகைபாறை பழைய கருப்புசாமி கோவில் குடியிருப்பை சேர்ந்த 37 வயதாகும் ராஜா என்பவர் கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவி ஜெயாவுக்கு 31 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். ஜெயா தனது கணவர் ராஜாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்தார். மேலும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ராஜாவை அவருடைய தாய் மற்றும் உறவினர்களிடம் பேசக் கூடாது என்றும் பிரச்சினை செய்து வந்தார்.. மீறி உறவினர்களிடம் பேசினால், கணவன் என்றும் பாராமல் அவரை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.'
இந்தநிலையில், ராஜா தனது தாய் அன்னத்தாய், அக்கா தங்கம் ஆகியோருடன் பேசியிருக்கிறார்.. தனது பேச்சை கேட்காமல் உறவினர்களிடம் பேசுகிறாயா என்று ஆத்திரம் அடைந்த ஜெயா தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி இரவு ராஜா வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.
அப்போது ஜெயா, சமையல் அறையில் பதுக்கி வைத்து இருந்த அரிவாளை எடுத்து வந்துள்ளார். அந்த அரிவாளால் தனது கணவரை வெட்டினார். அவர் வலியால் அலறினார். அந்த சத்தம் கேட்டு அதே பகுதியில் வசிக்கும் அவருடைய தாய் அன்னத்தாய் அங்கே ஓடி வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார். இந்தநிலையில் வீட்டுக்குள் ராஜாவை அவருடைய மனைவி ஜெயா கடுமையாக வெட்டி கொலை செய்தார்.
கணவர் இறந்த பின்னர் தடயங்களை மறைத்து, வலிப்பு வந்து இறந்தது போல் மாற்றிவிட அவர் திட்டமிட்டார். இதற்காக கணவரின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை அகற்றிவிட்டு அவர் உடலை வீட்டுக்குள் வைத்து குளிப்பாட்டியிருக்கிறார்.. பின்னர் வீட்டில் படிந்து இருந்த ரத்தக்கறைகளை துடைத்து சுத்தம் செய்திருக்கிறார். கணவருக்கு வேறு ஆடை அணிவித்தார். பின்னர் ரத்தக்கறை படிந்த ஆடை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை வீட்டுக்கு அருகே மறைத்து வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோவை அங்கு அழைத்து வந்தார். தனது கணவருக்கு வலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். செல்லும் வழியில் கணவர் இறந்து விட்டதாக ஆட்டோ டிரைவரிடம் கூறி மீண்டும் வீட்டுக்கே உடலை கொண்டு சென்றாராம். இதில் சந்தேகம் அடைந்த ராஜாவின் தாய் அன்னத்தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து பார்த்த போது ராஜாவின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தன. வீட்டில் ரத்த வாடை அடித்தது. ஜெயாவை பிடித்து விசாரித்த போது அவர் கொலை செய்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதுகுறித்து அன்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயாவை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.வழக்கு விசாரணை முடிவில், கணவரை கொலை செய்து நாடகமாடிய ஜெயாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
