ஓடிப்போன மகள்: ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்!

கர்நாடக மாநிலத்தின் ஒரு குடும்பத்தில், மகள் வீட்டை விட்டு ஓடிவிட்டதைக் காரணமாகக் கொண்டு, அவதூறு ஏற்படும் என்ற பயத்தில் பெற்றோர் மற்றும் தங்கை ஆகிய மூவர் ஏரியில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் மகாதேவ் சுவாமி (வயது 55), அவரது மனைவி மஞ்சுளா (வயது 45) மற்றும் அவர்களின் இளைய மகள் ஹர்ஷிதா (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலை மூவரும் பைக்கில் சென்று புதனூர் ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு பைக்கை நிறுத்தி, செருப்புகளை அந்த இடத்தில் விட்டு, தற்கொலைக்கான கடிதம் எழுதி, ஏரியில் குதித்துள்ளனர்.
இந்த காட்சியைப் பார்த்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புப் படையினரும் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
தற்கொலைக்குறிப்பில், "எங்கள் மரணத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. எங்கள் சொத்துகள் எதுவும் எங்கள் மூத்த மகளுக்குக் கொடுக்கவேண்டாம். அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள். எங்களை போல யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது. அவதூறு காரணமாகவே இந்த முடிவை எடுத்தோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது எச்.டி. கோட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், வீட்டை விட்டு ஓடிய மூத்த மகள், தனது பெற்றோர் மற்றும் தங்கையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் மூவரது உயிரிழப்பு, அந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
