நடிக்க தயங்கும் சூர்யா! அஜித், விஜய் பட வரிசையில் சூர்யாவின் படமும்!! பூஜையோடு நிற்கும் கவுதம் படங்கள்!!!

ஏப்ரல் 29ஆம் தேதி பூஜை போடப்பட்டு, மே 2ஆம் தேதியே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்கம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாகத் திகழும் சூர்யா நடிப்பு, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசை என பெரிய எதிர்ப்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், இன்னும் அறிவிப்போடே நிற்கிறது.
சூர்யா சிங்கம் 2 படத்தை முடித்த பின்னர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக நிற்கிறார்கள். ஆனால் சூர்யா தான் படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராக இல்லை. பொதுவாக ஒரு படத்துக்கு கமிட் ஆன பின், இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார் சூர்யா. ஆனால் முதல் முறையாக அவர் இந்த அளவுக்கு தயக்கம் காட்டி வருகிறார்.
இந்தப் படத்தை கவுதம் மேனனே தன் போட்டான் கதாஸ் மூலம் தயாரிக்கிறார். சூர்யாவுடன், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆனால் சூர்யாவின் ஜோடி மட்டும் முடிவாகவில்லை. இந்த படத்திற்காக த்ரிஷாவை கேட்டார் இயக்குனர் கவுதம். ஆனால் தள்ளிபோகும் படப்பிடிப்பால் கடுப்பான த்ரிஷா உங்க படமே வேண்டாம் என்று தானே விலகி விட்டாராம்.
மேலும் படத்தில் அமலா பாலை ஒப்பந்தம் செய்ததாகவும், தற்போது இப்படத்தில் அமலா பாலும் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். படம் எப்போது தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. இதற்கிடையில் சூர்யா ஆகஸ்டில் லிங்குசாமி படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.
இதனால் துருவ நட்சத்திரம் தொடங்குமா, அல்லது விஜயின் யோஹன் மாதிரி ஆகிவிடுமா என்பது இப்போதைய கேள்விக்குறி. கவுதம் மேனனின் அணுகுமுறைகளால் தான் ஒவ்வொரு படமும் பூஜையோடு நின்று விடுகிறது, ஹீரோக்கள் விலகி ஓடுகிறார்கள் என்கிறார்கள் ஒரு தரப்பினர். முதலில் அஜித்தின் துப்பறியும் ஆனந்த், அடுத்து விஜயின் யோஹன், அத்தியாயம் ஒன்று, அடுத்து சூர்யாவின் துப்பறியும் ஆனந்த், தற்போது சூர்யாவின் துருவ நட்சத்திரம் என அனைத்துக்கும் இதே கதிதான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
