யார் இந்த ’சினேகாவின் காதலர்கள்’??

தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த மசாலா சூதுகள் விடைபெறும் ’நேரம்’ வந்துவிட்டது. பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்து வேட்டுக்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, ’’புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்’’- இதுதான் இன்றைய தமிழ் சினிமா ரசிகனின் வேட்கை.
அந்த வரிசையில் முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ் சினிமா சொல்லத் தயங்கிய சங்கதியை செல்லுலாயுடு சபைக்கு கொண்டுவரும் படமாக, தயாராகிறது சிநேகாவின் காதலர்கள்.
நட்பு – காதல் – காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகசிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்துகொள்ளும் படம் இது.
ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் ‘தன் சுயத்தை’க் கண்டறிய, காத்துக் கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சிநேகா. தமிழ்ச்சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்’ என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப் பார்க்கிறாள் அவள். ஆண் – பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்’.
மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும்.
துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது. பாடல்களுக்கான இசைக்கோர்ப்பு இம்மாதம் இறுதியில் துவங்க, ஜுன் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்கி, மதுரை பெங்களூர்கள் வழியாக ஆகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைகிறது.
தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, ‘தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அளவான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க, அவருடன் இணை தயாரிப்பாளராக கரம் கோர்க்கிறார் அமலா கலைக்கோட்டுதயம். கடைசி வரை பிரபலமே ஆகாத பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள, இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல, எட்டு பாடல்கள் இடம் பெறும் இப்படத்துக்கு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இரா.ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி. தயாரிப்பு நிர்வாகம் அருள். மக்கள் தொடர்பு நிகில் முருகன். ’சிநேகாவின் காதலர்கள்’ திரை தரிசனம் அநேகமாக டிசம்பராக இருக்கக்கூடும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
