குடிகாரனாக நடிக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி...

எந்த ஒரு திரைப்படம் வணிகக் கூறுகளுடன் தொகுக்கப்பட்ட எளிய மற்றும் தனித்துவமான கருப்பொருளை கொண்டிருக்கிறதோ, அது எப்போதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இதை பல படங்கள் நிரூபித்துள்ளன. தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்துள்ள தண்ணி வண்டி இந்த அம்சங்களை மிகச் சிறப்பாக விளக்குகிறது என்பது தெளிவாகிறது. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த “தண்ணி வண்டி” என்ற தலைப்பு உடனடியாக நம்மை அதோடு பொருத்தி பார்க்க வைக்கிறது. ஆனால், இயக்குனர் மாணிக்க வித்யா,கூறுகையில் , “இந்த பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை" என்றார்.
படத்தின் கதை குறித்து சூசகமாக கூறிய மாணிக்க வித்யா, மாவட்ட வருவாய் அலுவலரின் கதாபாத்திரத்திற்கு பல பரிசீலனைகள் இருந்தன என்று கூறுகிறார். இது குறித்து மேலும் கூறும்போது, “ஆம், இது வலுவான முக்கியத்துவத்தை கொண்ட ஒரு கதாபாத்திரமாகும், குறிப்பாக சக்திவாய்ந்த வசனங்களை உடையது. இந்த கதாபாத்திரம் பல முன்னணி கலைஞர்களால் கூட விரும்பப்பட்டது, இறுதியாக நாங்கள் அஸ்வதியை தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தோம். உண்மையில், அவர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்" என்றார்.
இந்த படத்தில் தம்பி ராமையா நாயகன் உமாபதியின் அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, சன் டிவி புகழ் மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.இப்படத்தை வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசையமைத்துள்ளார் . மோகன்ராஜ், கவிஞர் சாரதி ,மற்றும் கதிர்மொழி இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர் .சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தர் அமைத்துள்ளார் .
ஜி சரவணன் அவர்களின் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் இந்த தண்ணி வண்டி திரைப்படத்தை தங்களின் 3வது தயாரிப்பாக உருவாக்கி வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
