Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முரசொலி செல்வம் மறைவிற்கு மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி!

On October 10, 2024
y1-1728543442
Share

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) (வயது 82) இன்று பெங்களூரில் காலமானார்.

பெங்களூரில் செல்வியின் வீட்டில் இருந்து முரசொலி செல்வம் உடல் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன் பிறந்த சகோதர் முரசொலி செல்வம். அவரது மறைவு திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கருணாநிதி குடும்பத்தினரால் திமுகவினருக்காக நடத்தப்படும் முரசொலி நாளிதழின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர் முரசொலி செல்வம். தமது தாய்மாமா கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தார் முரசொலி செல்வம். செல்வி- முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார். அண்ணா திமுக ஆட்சியில் உரிமை மீறல் விவகாரத்தில் தமிழ்நாட்டு சட்டசபை கூண்டில் ஏறி நின்றி தமது வாதங்களை முன்வைத்தவர் முரசொலி செல்வம். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை எழுதியவர்தான் முரசொலி செல்வம்.

பெங்களூர் சதாசிதவம் நகரில் வசித்து வந்த முரசொலி செல்வம், இன்று முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து பெங்களூர் எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி: முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் - செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம்.

கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.

அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். "முரசொலி சில நினைவுகள்" என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.

அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!

செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.