புதிய மாற்றத்திற்கு தயாராகும் தமிழக அரசின் ரேஷன் கடை!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இனி வரும் காலங்களில் புதிதாக வாங்கப்படும் தராசுகள் தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளின் உணவு பொருள் விநியோகம் குறித்த புள்ளி விவரம் ஒன்றிற்கு, சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த இரண்டு மாதம் முன்பு பதில் அளித்தார். இதன்படி "தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 51,327 ஏற்கப்பட்டுள்ளன. 37,299 முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது.
புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் உணவுத் துறை அமைச்சர், உணவுத் துறை செயலர், ஆணையர் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை தொடர்பான புகார் தெரிவிப்பதற்காக மாதந்தோறும் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட மொத்தம் 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
ரேஷன் கடைகளில் மொத்தம் 97535 புகார்கள் வந்துள்ள நிலையில், சராசரியாக ஒரு கடைக்கு இரண்டு முறைக்கு மேல் புகார்கள் வந்துள்ளது உறுதியாகி உள்ளது. குறிப்பாக கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு ஆகிய புகார்கள் தான் பிரதானம் என்று அரசே கூறியிருந்தது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல கட்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகள்.. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு நவீன தராசுகள் அவசியம் என்று அரசு நினைக்கிறது.
அதேபோல் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் அட்டைகளுடன் ஆதாரை இணைத்து, ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு உறுப்பினர்களில் யாராவது வந்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதிலும் சில சிரமம் வந்தது. மூத்த குடிமக்கள் கைவிரல் ரேகை பதிவு வைப்பதில் ஏற்படும் சிரமங்கள் வந்தது. இதனை தவிர்க்க கருவிழிப் பதிவும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்ததாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் உள்ள எடை எந்திரங்கள், கடையில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) புளூடூத் அல்லது கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, எடை தராசில் சரியான எடை அளவு இருந்தால் மட்டுமே ரசீது வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் மிக மிக துல்லியமான அளவு என்பதால், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த காலதாமதத்தை குறைப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கைவிரல் ரேகை பதிவு 90 சதவீதம் துல்லியத்தன்மை இருந்தால் மட்டுமே ரசீது போட முடியும் என்பதை குறைத்து 70 சதவீதம் துல்லியத்தன்மை இருந்தாலே ரசீது போடும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் பொருட்களை பெறுவதற்காக 2 முறை கைவிரல் ரேகை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதையும் ஒரே ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் பொருட்களை எளிதாக பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வரிசையில், 'புளூடூத்' மற்றும் கேபிள் மூலம் தராசுகளை மின்னணு விற்பனை கருவியுடன் (எஸ்.ஓ.பி.) இணைத்து சரியான எடை வந்தால் மட்டுமே ரசீது போடப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காக, இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளுக்கு புதிதாக வாங்கப்படும் தராசுகள் தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
