Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புகார் அளிக்க வந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றிய விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர்: அதிரடி சஸ்பெண்ட்!

On June 9, 2025
n6676774681749477805324390a10fbdc057b2011ee1deab6fd3f9244d225b458faf4b6eca7545420b648be
Share

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், 4 மாதம் முன்பு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். அப்போது இரவுப் பணியிலிருந்த விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பிரச்னையை தீர்த்து வைத்தார். அதன் பிறகு இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு இளம் பெண் வாட்ஸ் அப் மூலம் நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தினமும் இளம் பெண்ணுக்கு காலையில் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார். பிறகு அவரை தொடர்பு கொண்டும் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர், 'எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இப்போ தனியாகத்தான் இருக்கிறேன். உனக்கு விருப்பம் என்றால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம்'' என கூறியுள்ளார். இன்ஸ்பெக்டரின் வசீகர பேச்சில் அந்தப் பெண் மயங்கியுள்ளார். பிறகு இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அடிக்கடி ஒன்றாக இருக்கும் போது, இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் அந்த இளம் பெண்ணின் தொடர்பை துண்டித்து வந்துள்ளார். இந்த விஷயம் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்த அவரது மனைவிக்கு தெரியவரவே விஷயம் விஸ்வரூபமானது. இந்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இன்ஸ்பெக்டர் இளம் பெண்ணிடம் எனக்கு விவாகரத்து ஆகவில்லை. தற்போதும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் ஒன்றாக வசிக்கிறேன். எனவே நீ என்னை தொந்தரவு செய்யாதே.. என கூறியுள்ளார். அதற்கு இளம் பெண் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் இன்ஸ்பெக்டர் இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்ஸ்பெக்டருக்கு பயந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு மயிலாப்பூருக்கு குடியேறினர். ஆனால் இளம் பெண் தன்னுடன் இன்ஸ்பெக்டர் ஒன்றாக இருந்த நாட்களை நினைத்து அவர் மீதான காதல் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் இளம் பெண் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்ஸ்பெக்டருக்கு கார் ஓட்டும் காவலர்களையும் தொடர்பு கொண்டு எந்த பயனும் இல்லை.

இதனால் இளம் பெண் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு போன் செய்து, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தன்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். ஆனால் காவல் நிலையத்தில் இளம் பெண் மீதான புகாருக்கு சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்து விட்டனர். ஒருகட்டத்தில் இளம் பெண் சம்பவம் குறித்தும், சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் புகைப்படங்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களுடன் புகார் அளித்தார். அதன்படி இணை கமிஷனர் விசாரணை நடத்தும் வகையில் இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகாமல் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இருந்தாலும் இணை கமிஷனர் இன்ஸ்பெக்டரை விசாரணை முடியும் வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு இணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் மற்றும் இளம் பெண் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்து இன்ஸ்பெக்டர் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக அவரது மனைவியும் தற்கொலை முயற்சி செய்த சம்பவமும் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.

மேலும், இன்ஸ்பெக்டர் கண்ணன் தவறான செயலுக்கு அவரது கார் ஓட்டுநர்களான காவலர்களும் உடந்தையாக இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை இணை கமிஷனருக்கு உயர் அதிகாரிகள் அளித்தனர். மேலும், சம்பவம் குறித்து இணை கமிஷனர், கமிஷனர் கவனத்திற்கும் கொண்டு சென்றார். அப்போது கமிஷனர் பணியின் போது ஒழுங்கினமாக நடந்ததால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனருக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான அறிவிப்பானையும் அவரது வீட்டில் காவல்கள் அளித்துள்ளனர். புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் மயக்கி திருமணம் ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்திய சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.