தீராக் காதல் திரை விமர்சனம்

ஜெய், ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு முக்கோண காதல் கதை தான் “தீராக் காதல்”. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
கதைப்படி,
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கல்லூரி காலத்தில் காதலித்து பிரிந்தவர்கள். அதன் பிறகு எட்டு வருடம் கழித்து இருவரும் சந்திக்க நேரிடுகிறது.
அதில் ஜெய்க்கு ஷிவதாவுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுமைக்கார அஜ்மத்தை திருமணம் செய்து படாத பாடு பட்டு வருகிறது.
இருவரும் வேலை நிமித்தமாக சந்திக்க நேரும் சமயத்தில் பழைய காதல் நினைவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து இருவரும் சிரித்து பேசுவது, ஊர் சுற்றுவது என இருக்கிறார்கள்.
ஆனால், தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என புரிந்து கொள்ளும் ஜெய் முன்னாள் காதலியை விட்டு பிரிகிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் கணவனுடன் சண்டை போட்டு பிரிந்து ஜெய்யின் வீட்டுக்கு எதிரிலேயே குடி வருகிறார்.
மேலும், தன் பழைய காதலை மீட்டெடுக்கவும் முயல்கிறார். இப்படி மனைவியா, காதலியா என்ற சிக்கலில் மாட்டி தவிக்கும் ஜெய் என்ன செய்வார், முடிவு என்ன என்பது மீதிக் கதை.
சுப்ரமணியபுரம், வாமனன், ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய்யின் நடிப்பு இப்படத்தில் தான் நம்மை ரசிக்க வைத்துள்ளது. காதலன், கணவன், அப்பா என தன் கதாபாத்திரத்திற்கு அவரின் நடிப்பு சிறப்பு.
அதே போன்று அக்மார்க் குடும்ப தலைவனாகவும், காதலியும் கஷ்டத்தை கேட்டு உருகுபவராகவும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் ஜெய்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது கொடுமைக்கார கணவனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதும், முன்னாள் காதலன் ஜெய்யை மீண்டும் அடைய நினைப்பதும் என அவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் போல் இருந்தாலும், க்ளைமாக்சில் அவரின் வலியை உணரச் செய்துவிடுவார்.
அதேபோன்று தன் கணவனின் மீது அன்பு கொள்ளும் சராசரி மனைவியாகவும், எங்கே அவர் தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ என சந்தேகம் கொள்ளும் காட்சியிலும் ஷிவதா கைதட்டலை பெறுகிறார்.
இவ்வாறாக நகரும் கதை வேறு கோணத்தில் சென்று விடக்கூடாது என்பதையும் இயக்குனர் தெளிவாக மனதில் வைத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.
இப்படி படத்தில் நிறைகள் இருந்தாலும் சில காட்சிகள் தேவையற்றதாக இருக்கிறது. மேலும், இரண்டாம் பாதியை சற்று எடிட் செய்திருக்கலாமோ என்ற எண்ணமும், வழக்கமான க்ளைமாக்ஸும் நமக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
