செந்தில் பாலாஜி வருகை: துக்கம் தொண்டையை அடைக்க கையை பிடித்த எம்பி ஜோதிமணி

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று ஜாமீன் கிடைத்ததை அடுத்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இன்று அவரை அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். அப்போது அவரைப் பார்த்து நலம் விசாரித்த கரூர் எம்பி ஜோதிமணி மிகவும் எமோஷனலாக காணப்பட்டதோடு, செந்தில் பாலாஜியின் கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.
இன்று முதல் நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். தொடர்ந்து அவரை இன்று காலை திமுக அமைச்சர்களான மா சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
தொடர்ந்து செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும், அவர் பொறுப்பு வகிக்கும் கோவையிலும், அவரது ஆதரவாளர்கள், திமுகவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக பலரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக கரூர் எம்பி ஜோதிமணி வந்திருந்தார். முதலில் செந்தில் பாலாஜியை பார்த்ததும் பேச வார்த்தைகள் இன்றி துக்கம் தொண்டையை அடைக்க எமோஷனலாக காணப்பட்டார் ஜோதிமணி.
தொடர்ந்து அவரது கையைப் பிடித்து ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்த அவர் சிறிது நேரம் உரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," எந்தவித சமரசமும் இன்றி சட்டப் போராட்டம் நடத்தி செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்" என ஜோதிமணி கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
