சுகாதாரமற்ற பிரியாணி வழங்கிய கடைக்கு சீல்

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிரபல பிரியாணி கடையின் சமையல் கூடம் இயங்கி வருகிறது.
இந்த பிரியாணி கடைக்கு சென்னையின் பிற பகுதியில் 10 இடங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்பு என்பவர் இந்த பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடை குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததால் பிரபலமானது.
மேலும், பிரியாணி தரமற்ற முறையில் இருப்பதாகவும், சமையலறை உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் இந்த கடை மீது கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெயதீஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் ஆகியோர் தலைமையில் வந்த உணவு பாதுகாப்பு துறையினர் சமையல் கூடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் சமையலறை இருப்பதும், தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சமையல் கூடத்தை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முயன்றனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரியாணி செய்து வைத்திருந்த பிரியாணி டபராக்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை சாலை நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் அந்த சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர் அப்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
