Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறுவனை கொன்று விட்டு நாடகம் ஆடிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: கன்னியாகுமரியில் பரபரப்பு!

On June 7, 2025
n6673369081749239452276431e116db09eb72ab5fdfd0d63119b653bfbdaae129807d35090a3733f92af9b
Share

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடியப்பட்டணம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொடூரமான குழந்தையின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட் வெளிநாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சகாய சில்ஜா, 4 வயது மகன் ஜோஹான் ரிஷி மற்றும் ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 21.01.2022 அன்று ஜோஹான் ரிஷி வீட்டு வெளியே விளையாடும்போது திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையின் போது, பக்கத்து வீட்டு பெண் பாத்திமா, நகை அடகு கடையில் தங்க நகைகளை அடகு வைக்க சென்றது அதிகாரிகளின் சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், சிறுவனை கொலை செய்ததாக பாத்திமா ஒப்புக்கொண்டார்.

பின்னர், பாத்திமாவின் வீட்டில் நடந்த சோதனையில், வாயும் கையும் துணியால் கட்டப்பட்ட நிலையில் பீரோவில் சிறுவன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் கழுத்திலும் கைகளிலும் இருந்த சுமார் 1.5 பவுன் தங்க நகைகளைத் திருடும் நோக்கில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

மேலும், பாத்திமாவின் கணவரும் குற்றத்தில் தொடர்புடையவராக இருந்து, சடலத்தை மறைக்க உதவியதாக தெரியவந்தது. இது குறித்து குளச்சல் காவல் ஆய்வாளராக இருந்த அருள் பிரகாஷ், கூடுதல் பொறுப்பாக வழக்கை தீவிரமாக விசாரித்து, வழக்கை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 34, 201, 302, 342, 364, 369, 379 ஆகியவற்றில் மாற்றி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெகதேவ் வாதாடினார். ஜூன் 4 அன்று நீதிபதி ராமச்சந்திரன் தீர்ப்பு வழங்கியதில், முதன்மை குற்றவாளியான பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை, அவரது கணவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.