Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காதலை ஏற்காத காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்: வேலூரில் பரபரப்பு!

On May 24, 2025
n66558683317481072623601c84b5c373089b269254f979e2d7647d0b452e16474a24402d52ede3c1eed315
Share

வேலூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம், மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னஅல்லாபுரம், கே.கே. நகர், திரவுபதியம்மன் கோயில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டத்தைச் சேர்ந்த ஜான்பாஷாவை திருமணம் செய்தார். குழந்தை இல்லாததுடன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2 வருடங்களாக சபீனா தனியாக தன் பெற்றோருடன் வசித்து வந்தார். சதுப்பேரியில் உள்ள ஒரு தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த சபீனா, அந்நிறுவனத்தில் வேலை பார்த்த வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவருடன் பழக்கம் வளர்ந்தது. இது காதலாக மாறியதுடன், இருவரும் திருமணம் செய்வது குறித்து பேசிவந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ் வேலைக்குச் செல்லவில்லை. மேலும், சபீனா அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இது சுரேஷை மன வேதனையில் ஆழ்த்தியது.

இதனால் 2025 மே 22 வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் சபீனாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுரேஷ், சபீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தன் பையில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் தாக்க முயன்ற போது, அவரைத் தடுக்க வந்த சபீனாவின் தந்தை சிராஜூதீன் மற்றும் தாயார் ஆஜிரா ஆகியோரை கம்பியால் தாக்கினார். இருவரும் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர்.


இதனைப் பார்த்த சபீனா தப்பியோடி, வீட்டு அருகிலிருந்த மின்கம்பம் பகுதியில் சுரேஷால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் அவரை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியதால், சம்பவ இடத்திலேயே சபீனா உயிரிழந்தார்.


சபீனாவை கொலை செய்த பின், தன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற சுரேஷின் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, போலீசார் விருபாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டை கண்டுபிடித்து சென்றனர். அங்கு சுரேஷ், தன் அறையில் விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.


சபீனாவின் உடல் உடற்கூறாய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுரேஷின் உடலும் கைப்பற்றி அனுப்பப்பட்டது. சம்பவம் தொடர்பாக பாகாயம் மற்றும் வடக்கு காவல் துறைகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இரண்டு குடும்பங்களையும் வாட்டிய இந்த சம்பவம், வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.