Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கலைகட்டப்போகும் திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு : ஒரு லட்சம் பெண்கள்பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

On October 2, 2024
b824939e-81da-422c-8506-2a52d63e9744
Share
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மது மற்றும் போதை ஒழிப்புக்கு எதிராக விசிக நடத்தும் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையில் இந்த மாநாட்டிற்காக நாற்பது ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளி மாநாடாக இந்த மாநாட்டை வடிவமைத்து, முழுமையாக நடத்தி முடிக்கும் பணியை விசிக -விற்காக வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் தான் கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் விசிகவின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டையும் பிரமாண்ட முறையில் நடத்திக்காட்டி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தனர். இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா தற்போது விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக இருப்பதால் மாநாட்டு பணிகளை நேரடியாக அவரே கண்காணித்து வருகிறார். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 அடி உயரத்தில் தொலைவில் உள்ளவர்களும் காணும் வகையில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முகமாக புத்தரின் உருவம் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு, மாநாட்டு பந்தலின் பக்கவாட்டில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்கள் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலைவர்கள் தவிர, மதுஒழிப்பிற்காக குரல் கொடுத்த தலைவர்களின் கட்அவுட்கள் பிரமாண்ட முறையில் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் ,பெரியார், காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு ஐம்பது அடியில் பிரமாண்ட் கட்அவுட் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளது. குடியால் குடும்பங்களை இழந்த பெண்களின் குரல்களை வார்த்தைகளாக பதிவு செய்து மாநாட்டு நுழைவு வாயிலில் பதாகைகளாக வைத்திருப்பது சிறப்பு. மாநாட்டு திடலின் இருபுறமும், மது மற்றும் போதை பயன்பாடுக்கு எதிராக தலைவர் பலரும் குறிப்பிட்ட கருத்துக்களை பதாகைகளாக வைத்திருக்கிறார்கள். மேலும் மதுஒழிப்புக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தையும் இந்த மாநாட்டில் விசிக கட்சியினர் துவங்க உள்ளார்கள். மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த பிரமாண்ட இடம், மாநாட்டு திடலை ஒட்டியே கழிவறை வசதிகள், தூரத்தில் இருப்பவர்களும் மாநாட்டு நிகழ்வை காண பிரமாண்ட எல்.இ.டி திரைகள் என நவீனத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மாநாடாக இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் என்கிறது அரசின் தரப்பு.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.