நானோ டெக்னாலஜியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் கௌதம், கனி, கிரேஸ் (3 ஜீனியஸ்):

நானோ டெக்னாலஜியை அடிப்படையாக வைத்து தமிழ் சினிமாவில் கவுதம், கனி, கிரேஸ் ( 3 ஜீனியஸ்) என்கிற படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜீனியஸ் என்றாலே வயதானவர்கள் என்று நினைப்பது ஒரு தப்பான கற்பனை. ஜீனியஸ் என்றால் மேதாவி, மிகுந்த அறிவாளி, திறமையுடையவர் என்பது தான் பொருள். தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கவுதம், கனி, கிரேஸ் ஆகிய மூன்று சிறுவர்கள் தான் அந்த 3 ஜீனியஸ்.

இந்தப்படத்தினை மலேசியாவைச் சேர்ந்த சிவா கணேசன் தயாரிக்க, பி.கே.ராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டத்தோ மு.சரவணன், “எதிர்பாராதவிதமாக தயாரிப்பாளர் ஆகியிருக்க்கும் சிவா எனது நண்பர். அதனால் தான் டில்லிக்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்த நான் சென்னையில் நடைபெறும் இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்… சினிமா என்பது கவனமாகக் கையாளவேண்டிய துறை…. கருத்துச் சொல்லவேண்டும் அதே நேரத்தில் பொழுதுபோக்கும் மிகவும் அவசியம்…. சிறப்பான பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்லப்படும் கருத்தே மக்கள் மத்தியில் சென்றடையும்…. இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நான் நாடோடி என்று சொல்லித்தான் நாடோடி மன்னனை தயாரித்தார் எம்.ஜி.ஆர்… நல்ல விஷயங்களை வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து அந்தப் படத்தில் சொன்னார் எம்.ஜி.ஆர்… படம் வெளியானவுடன அவர் சொன்னதுபோலவே மன்னன் ஆகிவிட்டார்… அவரது சூத்திரத்தைப் பயன்படுத்தி படம் எடுத்தால் நிச்சய வெற்றிதான்..” என்றார்.

படத்தினைப் பற்றிக் கூறிய இயக்குனர் பி.கே.ராஜ், “படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் அந்த 3 ஜீனியஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களாக வருகிறார்கள்… கவுதம் – ஹிந்து, கனி-முஸ்லீம், கிரேஸ் – கிறிஸ்துவம் ஆக வித்தியாசமான கதைக்களத்துடன் மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்தப் படம்..” என்றார்.