இரண்டாம் உலகம் – விமர்சனம்!

1459702_595452210491355_1488023233_n

மயக்கம் என்ன படத்திற்கு பின்னர் செல்வராகவன் இயக்கும் படம், ஆயிரத்தில் ஒருவனுக்கு பின் எடுக்கும் பெரிய பட்ஜெட் படம், ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு பின் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை இரண்டாம் உலகத்துக்கு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். அதற்கு காரணம் செல்வராகவன் என்ற ஒரு பெயர். அதற்கு கொஞ்சம் உதவுவது அனுஷ்கா, ஆர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளையும் நம்பி 6௦ கோடியை வாரி இறைத்திருக்கிறார்கள். அதன் முடிவு வெள்ளித்திரையில்.

ஃபேண்டசி என்பது நடப்பதற்கு சாத்தியமே இல்லாத விஷயங்கள், கற்பனை செய்து பார்க்ககூடிய விஷயங்களை திரையில் பார்ப்பது. அதனால் பெரிதாக லாஜிக் எல்லாம் பார்க்க தேவையில்லை. மையக்கதை என்னவென்று பார்த்தால் இரண்டு உலகங்கள், ஒன்று நாம் தற்போது வாழும் உலகம், இன்னொன்று ராஜா காலத்திலேயே இருக்கும் ஒரு உலகம், பெண்களை சமமாக நடத்தாமல் அடிமைகளாகவே நடத்தும், அதே சமயம் காதல் என்றால் கூட என்னவென்று தெரியாத ஒரு உலகம். அங்கு எப்போது முதல் காதல் உணரப்படுகிறதோ அப்போது தான் பூக்கள் பூத்து உலகம் செழிக்கும், மேலும் அந்த காதலினால் தான் ஒரு மாவீரன் உருவாக போகிறான் என்றும் அந்த உலகின் கடவுள் “அம்மா” சொல்கிறார்.

நம் உலகில் ஒரு ஆர்யா, அனுஷ்கா (மது, ரம்யா) ஜோடி, அதே மாதிரி அந்த உலகத்திலும் இதே ஜோடி (மருவன், வர்ணா) ஆனால் வேறு மனிதர்களாக. இந்த உலகத்தில் மது, ரம்யா இருவரும் காதலிக்கிறார்கள். திடிரென்று ரம்யா உயிரிழக்க, அவனது அப்பாவும் இறக்க மது தன் காதலி பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று அவளை தேடி அலைகிறான். அந்தத் தேடலில் நடக்கும் சில திடீர் நிகழ்வுகள் அவனை இரண்டாம் உலகத்துக்கு அழைத்து செல்கிறது, கூடவே நம்மையும். இப்படிக் காதலிக்கும் ஒருவன்தான் காதல் இல்லா தன் உலகத்தில் காதலை விதைக்க முடியும் என்று அம்மா நம்புகிறார். அந்த தேடலில் அனுஷ்காவை கண்டானா? இருண்டு போன இரண்டாம் உலகத்தில் காதலை விதைத்தானா? என்பதுதான் இரண்டாம் உலகத்தின் கதை.

ஆர்யாவை பொறுத்தவரை நன்றாக நடித்துள்ளார். எனினும் படம் முழுக்க அவரது உண்மையான ஆர்யாவை பார்த்த உணர்வு எழுகிறது. மறவனாக ஆர்யா வாளை எடுத்து ஆக்ரோஷமாய் ஓடிவரும் காட்சி அபாரம். இடைவேளையை ஒட்டி வரும் 2௦ நிமிடங்கள் ஆர்யா ராஜ்ஜியம்.

அழகான ரம்யா, அதிரடியான வர்ணா என வித்தியாசமான இரு கதாபாத்திரங்களிலும் இதுவரை பார்க்காத தோரணையில் அனுஷ்கா ரசிகர்களைக் கவர்கிறார். ரம்யாவின் தோழி, புரபஃசர், மதுவின் நண்பன் ஆகியோர் கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிக்க வைத்துவிட்டு செல்கின்றனர்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு அபாரம். கோவா, பிரேசில் மற்றும் ஜார்ஜியா காடுகளின் வண்ணத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றன. படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். பாடல்களை ஹாரிஸ் ஜெயராஜும், பின்னணி இசையை அனிருத்தும்  வழங்கியிருக்கிறார்கள். இசை நன்றாக இருந்தாலும் செல்வராகவன் படத்தில் இது குறைவுதான்.

இந்த மாதிரி ஒரு ஃபேண்டசி படத்தை எடுக்க தமிழ் சினிமாவில் மிகவும் துணிச்சலாக இறங்கிய இயக்குனர் செல்வராகவனை பாராட்டியே தீர வேண்டும். இது ஒரு புறம் இருக்க, சாதரணமாக அவர் எடுத்த ஒவ்வொரு காதல் படமும் காவியங்கள் வரிசையில் இடம் பிடிக்க இந்த இரண்டு உலக காதலிலும் அழுத்தம் கொஞ்சம் கூட இல்லாதது பெரிய ஏமாற்றம். மொத்தத்தில் கலர்புல்லாக ஒரு உலகத்தை, ஜாலியாக ரசிக்க இரண்டாம் உலகத்தை நிச்சயம் தியேட்டரில் காண்பது சிறப்பு.