காமெடி இருக்கும், ஆனா காமெடி இல்லை!!

GOP_6085

சாவேனியர் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக B.விஜய்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் படத்திற்கு “விடியும் வரை விண்மீன்களாவோம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகர்களாக B.விஜய்குமார், ஜெயகாந்தன், சிவபெருமாள், சந்துரு ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதாநாயகிகளாக நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹென்னா ஏற்கனவே மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறார். சிட்டிசன் சிவகுமார், கோபிநாத் மற்றும் ஜானகி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன், இசை – அச்சு.

இயக்குனர் B.விஜய்குமார் படம் பற்றி கூறும்போது, “நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் நான்கு பேர் கடந்த கால சிந்தனையும் வருங்காலம் பற்றிய யோசனையும் இல்லாமல் நிகழ்காலம் சந்தோஷமாக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள முடியும் தான். ஆனால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறான் ஒருவன். அதிலிருந்து மாணவர்கள் மீண்டார்களா?  என்பது திரைக்கதை!

இந்த படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். ஆனால் காமெடி படம் இல்லை. காதல் இருக்கும். ஆனால் லவ் சப்ஜெக்ட் இல்லை. கடைசி கிளைமாக்ஸ் காட்சி முப்பது நிமிடங்கள் திரில்லிங்காகவும் இருக்கும். இதில் எல்லாம் இருக்கும். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது என்றார் B.விஜய்குமார்.

இவர் அமெரிக்காவில் போய் படித்து முடித்து குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கி தாயகம் வந்து படம் இயக்க தன்னை தயார் படுத்திக்கொண்டு  ‘’விடியும் வரை விண்மீன்களாவோம்” படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.