ஆர்யா, விஜய் சேதுபதி இணையும் “புறம்போக்கு”!

arya

யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்யா – விஜய் சேதுபதி இணைந்து நடிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இவர் இயக்கிய ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ மூன்று படங்களிலுமே அடிநாதமாக ஆழமான சிந்தனையை கசியவிட்டு மக்களிடம் பதிய வைத்தவர்.

படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது, “புறம்போக்கு” என்பதை கொச்சையாகப் பேசுகிறார்கள். இந்த சொல் பற்றி மேலோட்டமான புரிதல் உள்ளது. ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வரலாற்று ரீதியான பொருள் கொண்டது. வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும்.

புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமில்லை என்பதல்ல. அது பொதுச்சொத்து என்று பொருள். ஊரில் குடியிருப்பு தவிர்த்து பொதுத் தேவைக்கு நிலங்களை ஏரிபுறம் போக்கு. சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம் போக்கு, மந்தைவெளி புறம்போக்கு என்று 15 வகைகளாகப் பிரித்து வைத்தனர். மக்கள் தொகை பெருகி குடியிருப்பு தேவைக்கு ஏற்ப குடியிருக்க வீடுகள் கட்ட நத்தம் புறம்போக்கு என்று விட்டு வைத்தனர். பொதுசாலை, பேருந்து நிலையம், பள்ளி, மருத்துவமனை கட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது புறம்போக்கு நிலங்களில்தான்.

அப்படி மக்கள் தேவைக்காக இருந்த, பொதுஇடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இப்படம்” என்று கூறுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

ஒளிப்பதிவு ஏகாம்பரம். எடிட்டிங் வி.டி.விஜயன். ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. வரும் அக்டோபரில் தொடங்குகிற இப்படம் 2014 ஏப்ரலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.