சினிமாவில் 50 ஆண்டுகளாகப் பாடி வரும் மூத்த பாடகர்களுக்கு வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் காப்புரிமைத் தொகை கிடைக்கிறது. இது தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரபல பாடகர்கள், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பி சுசீலா ஆகியோர் கூறுகையில், “சினிமா பின்னணி பாடகர்-பாடகிகள் நலனுக்காக, பாராளுமன்றத்தில் கடந்த 2012 ஜூன் மாதம் 21-ந் தேதி ஒரு சட்டம் நிறைவேறியது.
அதற்கு இந்தி சினிமா பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர், பின்னணி பாடகர் சோனு நிகம் ஆகிய இருவரும் பெரும் முயற்சி எடுத்தார்கள். அதைத்தொடர்ந்து, 2013 ஜூன் மாதம் 14-ந்தேதி ‘இஸ்ரா’ (இந்திய பாடகர்கள் உரிமை சங்கம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு சினிமா பின்னணி பாடகர்-பாடகிகளுக்கு காப்புரிமை மூலம் பணம் வாங்கித் தரும்.
ரேடியோ, செல்போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு காப்புரிமை மூலம் பணம் பெற்றுத்தரும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும். 1963-லிருந்து 50 வருடங்களாக சினிமாவில் பாடி வரும் பின்னணி பாடகர் – பாடகிகளுக்கு இந்த காப்பு தொகை கிடைக்கும்” என்றனர்.
இந்த சந்திப்பின்போது பின்னணி பாடகர்கள் ஹரிகரன், மனோ, மகாராஜன், பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், சுஜாதா மற்றும் இளம் பின்னணி பாடகர்கள் உடன் இருந்தனர்.