அங்குசம் படத்தின் மூன்று கட்ட இசை விழா!

Angusam-Movie-Audio-Launch-10அங்குசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெறுமனே படத்தைப் பற்றிய சிலாகிப்பாக  இல்லாமல்,  வழக்கத்துக்கு  மாறாக, ஒரு விழிப்புணர்ச்சி விழாவாக நடந்தது என்றே சொல்லலாம்.

பொதுமக்களுக்கு  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினைக் குறிப்பாக RTI என்று சொல்லப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும் விழாவாக அவ்விழா நடைபெற்றது.  அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த விழாவாக மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜ் மற்றும் மனுக்கண்ணன் தயாரித்து மனுக்கண்ணன் இயக்கியிருக்கும் அங்குசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பல ஊழல் பெருச்சாளிகளின் முகத்திரையைக் கிழித்துப் பொதுமக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை, அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கிடையிலும்  ஏற்படுத்திக் கொண்டிருக்கும், அங்குசம் படத்தின் நிஜநாயகன் ஸ்ரீநிவாசனை அழைத்து கெளரவப்படுத்தியது அங்குசம் படத்தின் குழு.

இருபகுதிகளாக நடைபெற்ற அங்குசம் படப்பாடல்கள் வெளியீட்டின் ஒரு பகுதியாக  மூத்த வழக்குரைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் துணைத்தலைவர் வழக்குரைஞர் பி.எஸ்.அமல்ராஜ், “நமது தேசத்தின் நிர்வாகம் மூன்று துறைகளைச் சார்ந்திருக்கிறது. நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்ற-பாராளுமன்றச் செயலாடுகள்.

இந்த மூன்று துறைகளுமே மக்களுக்காகத்தான். மக்கள் நலன்களுக்காகத் தான் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். அப்படிச் சட்டம் இயற்றுபவர்கள் யார்..? பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் மக்களால் அனுப்ப்ப்படும் பிரதி நிதிகளே…ஆக உண்மையில் இந்த நாட்டில் உயர்ந்த பட்ச அதிகாரம் படைத்தவர்கள் பொதுமக்களே! ஆனால் அந்த மக்களுக்காகச் சட்டம் இயற்றபடுவதில்லை…

மிகச்சிறிய நாடான சுவீடன் நாட்டில் 1766 லிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுவிட்ட்து… நம் நாட்டில் 2002ல் அதற்கான அடித்தளம் போடப்பட்டு 2003 இல் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது…இன்னும் நகர்ப்புறத்தில் 30% பேருக்கும் கிராமப்புறங்களில் 20% பேருக்கும் தான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறது…

தகவல் அறியும் சட்டத்தால் பல ஊழல்கள்  வெளியே வருகின்றன என்று அஞ்சும் அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.  நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்தால் அதனைத் தட்டிக்கேட்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறது… அதனால் தங்களது முயற்சிகள் பலனளிக்காது என்று உணர்ந்த அரசியல் வாதிகள் என்றுமில்லாத  செயலாக தேசிய நீதிக்கமிஷன் NJC என்று ஒன்றினை ஆரம்பிக்கிறார்கள்… தங்களுக்கு வேண்டியவர்களை அதில் உறுப்பினர்களாக நியமித்து தங்களுக்குச் சாதகமானதாக சட்ட்த்தை வளைத்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள்… தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பலவீனப்படுத்தும் பொருட்டு தாக்கல் செய்திருக்கும் சட்டதிருத்த மசோதாவிற்கு எந்த விஷயத்திற்காகவும் கூட்டுச் சேராத அத்துனை கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து ஆதரவு அளித்து ஏகமனதாக நிறைவேற்றப்போகின்றன…

இதுபோன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கமே நிறைய செலவிடுகிறது.. எனினும் சினிமாவின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கின்றது… சினிமாவின் மூலம் தகவல் அறியும் சட்ட்த்தினைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அது அனைவரையும் சென்றடையும்…” என்று பேசினார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஆன்ந்த கணேஷ் பேசும் போது, “தகவல் அறியும் சட்டத்திற்குட்பட்டக் கட்சியாக ஆம் அத்மி கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கின்றன… பொதுமக்களே இனியும் ஏமாற வேண்டும் இந்த்ச் சட்டத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட கட்சிகளை மட்டும் எதிர்காலத்தில் ஆதரியுங்கள்…

ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா, கீழே இலங்கை என்று இந்தியாவைச் சுற்றிலும் ஆபத்துகள் காத்திருக்கின்றன… இலங்கை உதவியுடன் சீனா நீர்முழ்கிக் கப்பல்களையும் ராணுவத்தளவாடங்களையும் அமைத்து வருகிறது… அது இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுருத்தலாகவும்அமைந்துள்ளது   … ஊழலற்ற வெளிப்படையான  நேர்மையான நிர்வாகத்தை அளித்தால் மட்டுமே இதுபோன்ற அச்சுறத்தல்களை முறியடித்து நமது நாட்டினை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும்… வரும் தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்… அடுத்த 15 நாட்களில் லோக்பால் சட்டம் அமல்படுத்தப்படும்…” என்று பேசினார்.

இவர்களுடன் கவிஞர் சல்மா, வழ்க்குரைஞர்கள் நன்மாறன், ஜேசு, கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி அய்யம்பெருமாள் மற்றும் தகவல் அறியும் உரிமை அமைப்பின் ரத்னபாண்டியன் ஆகியோரும் தகவல் அறியும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.

முத்தாய்ப்பாகப் பேசிய  ஸ்ரீ நிவாசன், “தகவல் அறியும் உரிமைச்சட்ட்த்தால் எங்கள் பகுதியில் உள்ள அரசு இயந்திரங்களில் நடைபெறும் நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறேன்…எங்களது பஞ்சாயத்துத் தலைவர் 2 கோடி ஊழல் செய்திருக்கிறார்..அதற்கு கலெக்டர் வரை உடந்தை… என்னிடம் ஆவணங்கள் இருக்கின்றன… ஜெயஸ்ரீ முரளிதரன் தான் எங்களது மாவட்ட ஆட்சியர்… அவர் ஊழலுக்குத் துணை போகிறார்… முறையாகக் கேட்கும் கேள்விகளுக்குக் கூட அவர் சரியான பதில்கள் சொல்வதில்லை… என்னை முடக்கப் பார்த்தார்கள்… சிறையில் அடைத்தார்கள்… நான் எதற்கும் பயப்படப் போவதில்லை…இறுதிவரைப் போராடுவேன்… இங்கே வந்திருக்கும் சட்ட நிபுணர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நன்றாக இருக்கும்..” என்று பேசினார்.

அடுத்தகட்டமாக பாடலாசிரியர் அண்ணாமலை மற்றும் திரவியம் எழுதி, ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான அங்குசம் படத்தின் பாடல்களும் முன்னோட்டக்காட்சியும் திரையிடப்பட்ட்து. மூன்றாவது கட்டமாக  நடந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அங்குசம் பட்த்தின் குறுந்தகட்டினை வெளியிட திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ நிவாசன் பெற்றுக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய சீமான், “ஸ்ரீ நிவாசன் ஒரு புரட்சியாளர் அவரைப் போன்றோர்கள் தாம் இன்று நம் நாட்டிற்குத் தேவை…அன்றாட வாழ்க்கையில் புரட்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது… புரட்சி என்பது என்ன… நம் காலடியில் கிடக்கும் ஒரு காய்ந்த சருகு… ஒரு தீக்குச்சியின் உரசலுக்காகக் காத்திருக்கிறது… மிகப்பெரிய குப்பைமேடானாலும் அதனை எரிக்க  ஒரு தீக்குச்சி போதும்… குப்பை மலை போல் நம் நாட்டில் குவிந்திருக்கும் ஊழல்களை ஒழிக்க ஸ்ரீ நிவாசன் போன்ற பத்து தீக்குச்சிகள் போதும்…  நீர் ஆதாரங்களையும் அதன் வழிகளையும் அழித்து விட்டோம்… அப்புறம் எப்படி நீர் வளம் பெருகும்…

ஐ நா சபையிலேயே சொல்லிவிட்டார்கள் குடி நீர் ஒரு சிறந்த வணிகப்பொருள் என்று… இன்று குடி நீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்… இதே நிலை நீடித்தால் மனிதனை மனிதன் கடித்து இரத்தம் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்…என் வீட்டுப் பாட்டன் கிணற்றில் தண்ணீர் எடுக்க நான் வெளி நாட்டுக்காரனுக்குக் கப்பம் கட்டவேண்டும்…இன்னும் கொஞ்சம் நாட்கள் சென்றால் சுவாசிக்கும் காற்றுக்கும் காசுகேட்பார்கள்…” என்று பேசினார். தொடர்ந்து ஸ்ரீ நிவாசனை மணக்க ஒரு பெண் மறுத்துவிட்டதை நினைவுபடுத்திப் பேசிய சீமான், “மண்ணுக்காகப் போராடுபவர்களுக்கு பெண் கொடுக்க யோசிக்கத்தான் செய்கிறார்கள்… ஆனால் அவன் போராளி …போராளி நிம்மதியாகத் தூங்குவான்… அவன் எந்த நொடியில் மறைந்தாலும் அவன் இந்த மண்ணுக்காகப் போராடிய போராட்டங்கள் அவனை மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கச் செய்யும்… ஸ்ரீ நிவாசன் ஒரு தலைசிறந்த போராளி..” என்று பேசினார். முன்னதாகப் பேசிய ஸ்ரீ நிவாசன், “சீமான் அண்ணா போன்றவர்களைப் பார்த்துதான் நான் போராளியாகவே மாறினேன் என்று பேசியது குறிப்பிட்த்தக்கது.

நமது மொழியினை இழந்து சுயமரியாதையை இழந்து வாழுகிறோம் என்று ஆதங்கப்பட்ட ஆர்.கே.செல்வமணி, “இப்பொழுது தமிழின் மீது அதிகக் காதல்கொள்கிறேன்… சீமான் அவர்களைப் பார்த்து நல்ல தமிழில் பேசக் கற்றுக் கொண்டேன்… பகத் சிங்கினை நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்… அவருக்குச் சற்றும் குறைவில்லாத வாஞ்சி நாதனை ஏன்  வட இந்தியாவில் தெரிந்து வைத்துக்கொள்வதில்லை..? தமிழ் நாட்டிற்கு நல்லது செய்யவந்தாலும் தமிழைக்கற்றுக் கொண்டு வாருங்கள்.. எனது படங்களில் தமிழ்தெரிந்தவர்களை மட்டும்தான் வேலைக்கு வைத்திருக்கிறேன்..” என்றார்.

விழாவில் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன் , இயக்குனர் மனோஜ்குமார், பட அதிபர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஸ்கந்தா (அங்குசம் ஹீரோ), ஜெயதி சுகா (அங்குசம் ஹீரோயின்) ,ஹுதாஷா (கண்ணிவெடி ஹீரோயின்),  வர்ஷாஅஷ்வதி.R, கோமல் சர்மா, ஷெரீன் ஆகியோர் கலந்து கொணடனர்.