ரசிகர்களின் கரகோஷத்தில் பாசமலர் ட்ரைலர் வெளியீடு!

71419_10151525393777337_669005535_n

பாசமலர் படம் புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது. இப்படம் சிவாஜி கணேசன், சாவித்ரி அண்ணன், தங்கையாக நடிக்க 1961–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஜெமினி கணேசனும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பீம்சிங் இயக்கினார்.

இப்படத்தில் இடம் பெற்ற வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாடல் இப்போதும் திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மலர்களை போல் தங்கை உறங்குகின்றாள், மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், எங்களுக்கும் காலம் வரும், மலர்ந்தும் மலராது பாதிமலர் போல போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்று உள்ளன. இப்பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து இருந்தனர்.

இது சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. பாசமலர் படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம், ஆர்.டி.எக்ஸ், கலர் சினிமாஸ் கோப் என மெருகேற்றப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி வெற்றி சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பி. பூமிநாதன் வெளியிட தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் பிரபு, ராம்குமார், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, வசனகர்த்த ஆரூர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக மெருகேற்றப்பட்ட பாசமலர் படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களின் கரகோஷத்திற்கிடையில் ஒளிபரப்பப்பட்டன.