பெண்ணை சரமாரியாக தாக்கிய கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக ஆட்டோ ஒன்று அந்த தெருவில் வந்துள்ளது. அப்போது அந்த சாலையில் ஆட்டோ உள்ளே நுழைய முடியாதபடி இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் வரமுடியாது .

இதை பார்த்த ரம்யா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரிடம் அருகே உள்ள வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்லாப் மீது ஏற்றி விடுமாறு கூறியுள்ளார். இதனை கவனித்த அந்த வீட்டின் உரிமையாளரான செங்காளியப்பன்(60) மற்றும் அவரது மகன் ராஜேஷ்(37) ஆகியோர் எங்கள் வீட்டின் முன்பு எப்படி வண்டியை நிறுத்த கூறினாய்? என ரம்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரம்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியும், ஆத்திரத்தில் ராஜேஷ் அருகில் இருந்த கம்பியை எடுத்து ரம்யாவை தாக்கவும் முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராஜேஷை பிடித்து சமாதானம் செய்துள்ளனர். பின்னர் ரம்யாவை அங்கிருந்து அனுப்பி உள்ளனர். அவர் அப்பகுதி வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது செங்காளியப்பனின் உறவினரான காப்பீட்டு ஏஜென்சி முகவர் சுந்தர்ராஜன் என்பவர் வந்துள்ளார். அவர் மீண்டும் என்ன நடந்தது என தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே வந்த வேகத்தில் ரம்யாவை தனது காலால் எட்டி உதைத்து கையைப் பிடித்து முறுக்கி கீழே தள்ளி உள்ளார்.இதனை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்திய போதும் சுந்தர்ராஜன் ரம்யாவை தொடர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ரம்யா துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் தெரிவித்ததாவது, செங்காளியப்பன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் என்னை அடிக்க இரும்பு ராடை எடுத்து வந்ததாகவும், சுந்தரராஜன் அடித்தபோது அருகில் இருந்தவர்கள் காப்பாற்றவில்லை எனில் தன்னைக் கொன்று இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சுந்தர்ராஜன், செங்காளியப்பன், ராஜேஷ் ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை தாக்கிய சுந்தர்ராஜன் வெள்ளக்கிணர் பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற மற்றொரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Response