தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில், 63 பேர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறை மூலமாக இந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.
இந்த வாக்கெடுப்பின்போது ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் இணைய இருப்பதாக செய்தி பரவுகிறது. அதோடு எம்எல்ஏ ஒருவர்கோவிலில் மாந்திரீக பூஜை செய்ய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்ட நிலையில் இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிப்பாரா என்று ஓபிஎஸ் கேட்க அப்போது இபிஎஸ் கலகலவென சிரித்தார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் சுமூக போக்கு நிலவுவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஓபிஎஸ் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்ததற்கான காரணம் பற்றி பேசியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, “நான் இன்னும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறேன். கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காகவே சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தேன்” என்று அவர் கூறினார். இதனால், அ.தி.மு.க. நிர்வாகத்தில் உள்ள குழப்ப நிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு, அவரது தற்போதைய அரசியல் நிலையை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.