டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பாஜக முக்கிய தலைவர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்த முயன்றனர்.
ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை காரணம் காட்டி போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலை 6 மணிக்கு மேலாகியும் அவர்களை காவல்துறை விடுவிக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் காவல்துறைக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
இந்த நிலையில் தற்போது அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக போராட்டம் நாடகம் என்றும் மேல் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிக்கை விட்டு விஜய் விமர்சித்ததை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘தமிழக வெற்றி கழகத்தை முதலில் களத்திற்கு வரச் சொல்லுங்கள். அவர்கள் பள்ளி குழந்தைகள் போல அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமா ஷூட்டிங்கில் இருந்து கொண்டு அரசியல் செய்வார்களா..? ஷூட்டிங்கில் உட்கார்ந்து கொண்டு பாட்டு பாடிக்கொண்டு, நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். எனக்கும் திரும்ப பேச தெரியும்
நான் தமிழக வெற்றிக்கழகத்தை இதுவரை மரியாதையாகத்தான் பேசி வந்தேன். அவர்கள் அவர்களின் எல்லையை தாண்டக்கூடாது. அறிக்கை விடும் பொழுது, அறிக்கைக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன நடிகைகளின் இடுப்பைக் கிள்ளிக்கொண்டு அவர்களுடன் நடனம் ஆடிக்கொண்டு அங்கிருந்து அறிக்கையை விட்டுக் கொண்டிருக்கிறேனா?
நான் களத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கிறேன். களத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இது என்ன Work From Home அரசியலா?
விஜய்க்கு 50 வயதில்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தோன்றியதா? 30 வயதில் அவர் எங்கே சென்றார். விஜய் யாருடைய பி டீம், நாடகம் யார் நடத்துகிறார். பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறதா? இல்லை விஜய் நாடகம் நடத்துகிறாரா..? நாடகம் செய்வது விஜய்.. நாடகம் நடத்துவது தமிழக வெற்றி கழகம்.. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பி டீம் தான் விஜய்..
தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நடவடிக்கைகளை பார்த்த பிறகு நான் கூறுகிறேன். திராவிட முன்னேற்ற கழகம் மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் தமிழக வெற்றிக்கழகம். அவர்கள் மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக் கொள்ள வேண்டும்.
புஸ்ஸி ஆனந்த், குஸ்ஸி ஆனந்தெல்லாம் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யக்கூடாது. திரைப்படத்தில் நீ புகை பிடிப்பாய்.. தண்ணி அடிப்பாய்; இதெல்லாம் செய்துவிட்டு டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு விஜய்க்கு யாருக்கு உரிமை கொடுத்தார்.’ என்று பேசினார்