கோவை அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று (11.03.2025) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர், வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னை வெறிநாய் கடித்துவிட்டதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைக் கேட்டு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அதன்பிறகு, அவருக்கு தனியாக ஒரு வார்டில் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட ராமச்சந்தர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று மதியம் திடீரென அவர் மருத்துவமனையின் அறிவிப்புப் பலகையின் கண்ணாடியை உடைத்து, அதன் துண்டுகளை கொண்டு தன்னையே தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கழுத்து மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கண்ணாடி துண்டுகளால் காயமடைந்ததால், அவர் மிகவும் மோசமான நிலையில் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் சம்பவம் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராமச்சந்தரின் கையில் கண்ணாடி இருந்ததால், அவருக்கு உடனடி உதவி செய்ய முடியாமல் மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் தயங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவர்களை அழைத்துவந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ராமச்சந்தரை மீட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.