2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்து உள்ளது.
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து சந்திப்பார் என்று அரசியல் ஆரூடங்கள் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு அவ்வப்போது விஜய் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம் என்று விஜய்யே ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘2026-ம் ஆண்டு ஒரு முக்கிய கட்சியுடன் கூட்டணி அமையலாம். ஆனால் கூட்டணி தொடர்பான முடிவு, அந்த நேரத்தில்தான் எடுக்கப்படும்’ என்று கூறி இருந்தார்.
அவர் குறிப்பிட்டது தமிழக வெற்றிக்கழகத்தை தான் என்றும், அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி அமைக்க இருக்கிறார்? என்றும் சமூக வலைத்தளங்களில் யூகங்கள் பற்ற வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கட்சியின் உயர் மட்ட நிர்வாகிகள் கூறுகையில், ‘எங்கள் நிலைப்பாட்டை பல முறை கூறி விட்டோம். 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். தற்போது வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
எங்கள் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நிர்வாகிகளையும் அறிவித்து வருகிறோம். எங்கள் தலைவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மற்றபடி, கூட்டணி தொடர்பாக வலைத்தளங்களில் வரும் விஷயங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்றனர்.