தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத், தற்போது ‘OPR கரம் கோர்ப்போம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
இதற்கான அறிவிப்பு, அவரின் பிறந்தநாளான நேற்று வெளியாகியது. மேலும், ஐந்து கைகள் கோர்த்த இலச்சினையையும் ஓபிஆர் வெளியிட்டிருக்கிறார்.
மேலும், “தமிழ்நாட்டின் இளைஞர்கள் வேலையின்மை , சுகாதார நெருக்கடிகள், சுற்றுப்புறச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கல்கள் அவற்றின் வளர்ச்சி மற்றும் திறனைத் தடுக்கின்றன. இவற்றை மேற்கொண்டு, மாற்றத்திற்கான ஒரு புதிய முயற்சி” என அமைப்பின் நோக்கத்தையும் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், இரத்த தானத்தை முன்னிறுத்தி, உயிர்ச்சாரல், வேலைவாய்ப்பைக் குறிக்கும் விதமாக உயர்தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிலச்சாரல் மற்றும் விளையாட்டை மேம்படுத்தும் விதமாக, வெற்றிச் சிறகு என நான்கு இலக்குகளையும் ஓ.பி.ரவீந்திரநாத் முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே விஜய் ரசிகரான ஓபி ரவீந்திரநாத், விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்து கூறியிருந்தார். மேலும், ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், “விஜய் கட்சி தொடங்கியது, அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்துக் கொடுத்தால், அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்'” என அடித்தளமிட்டு இருந்தார்.
எனவே, விரைவில் இவர் விஜய் கட்சியில் இணையப் போகிறார் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால், தற்போது துவக்கிய அமைப்பால், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் நேரடியாக இணையாவிட்டாலும், எதிர்காலத்தில் விஜயுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சராஜ ஓபிஎஸ்சின் மகன் ஆவார். இதன்படி, கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில், மாநிலத்தின் மற்ற அனைத்துத் தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற, தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்க, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட வேண்டி இருந்தது. இதனிடையே, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஓபிஆரை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு, எடப்பாடி தரப்பினர் கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் மனுவில் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதாக அவரின் எம்பி பதவியும் பறிபோனது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவரின் எம்பி பதவி தப்பித்தாலும், அடுத்த சில மாதங்களில் பதவிக்காலம் முடிவடைந்தது விட்டது. 2024 தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.