பழங்குடி இனத்துக்கு பதவி கொடுப்பது சாபக்கேடு: சுரேஷ்கோபி பேச்சால் சர்ச்சை!

திருச்சூர் பாஜக வேட்பாளர் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக உள்ள சுரேஷ்கோபி பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், உயர் சாதி தலைவர்கள் பழங்குடியினர் நலம் முன்னேற்ற அமைச்சகத்தை மேற்பார்வையிட்டால் முன்னேற்றம் காணலாம் என கூறினார். இவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியினத் துறைக்கு வெளியில் இருந்து யாராவது ஒரு பிராமணராகவோ அல்லது நாயூடாகவோ பொறுப்பேற்றால் மாற்றம் ஏற்படும். பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவரை மட்டுமே நியமிப்பது நமது நாட்டின் சாபக்கேடு எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளா முழுவதும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சுரேஷ் கோபி தனது கருத்தில் பின்னடைவை எதிர் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியதாவது, “நல்ல நோக்கத்துடன் கூறினேன். எனது கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றால் அதற்கான விளக்கம் திருப்தி தரவில்லை என்றால் எனது கருத்தை நான் திரும்பப் பெறுகிறேன். பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் கூறினேன்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Response