சென்னையை கலக்கும் போஸ்டர்: யார் பார்த்த வேலைடா இது?

தமிழகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் வித, விதமான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் போஸ்டர்கள் ஓட்டப்படுவதை நம்மால் பார்க்க முடியும்.

போஸ்டர் ஓட்டுவதிலும் அரசியல் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகரான சென்னையில் போஸ்டர்களை ஒட்டினால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நினைப்பவர்களும் உண்டு. அதனால், சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தினம், தினம் வித்தியாசமான போஸ்டர்களை பார்க்க முடியும். அந்த வகையில் சென்னை நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் போக்குவரத்தின் இதய பகுதியான அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளைத்து வளைத்து ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என்ற வாசகம் அதில் இடம் ெபற்றுள்ளது.

ெவள்ளை போஸ்டரில் கருப்பு நிறத்தில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. வேறு எந்தக் குறிப்பும் அந்த போஸ்டரில் இடம் பெறவில்லை. அதாவது இதனை யார் வடிவமைத்தது, எந்தக் கட்சிப் பொறுப்பாளர் என எந்த விவரங்களும் அதில் இடம் பெறவில்லை. இந்த போஸ்டரை பலரும் பார்த்து, இந்த போஸ்டரில் குறிப்பிடப்படுவது யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போஸ்டர் தான் சென்னையில் இன்றைக்கு ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பெயர் குறிப்பிடாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த போஸ்டரால் இனி என்ன நடக்க போகிறது என்ற பரபரப்பும் தொற்றியுள்ளது.

Leave a Response