பெண்களை வார்த்தைகளால் திட்டினால் கூட பாலியல் அத்துமீறல் தான் : நீதிமன்றம் அதிரடி!

அம்பத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர்களிடம், நிறுவனத்தின் மேலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பெண்கள் விரும்பாத செயல்கள் மட்டுமல்ல, சொற்களை கூறுவது கூட பாலியல் அத்துமீறல்தான்” என்று கூறியிருக்கிறது.

அம்பத்தூரில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்கள் பாலியல் கொடுமைகளை எதிர்க்கொண்டிருக்கின்றன. இது குறித்து தங்களது மேலாளர் மீது 3 பெண் ஊழியர்கள் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மேலாளரை பணிநீக்கம் செய்த நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் எந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தாலும் அவருக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கொடுக்க கூடாது என்றும் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரைகளை எதிர்த்த மேனேஜர், தொழிலாளர் நலத்துறையில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், “எனது தரப்பு நியாயத்தை நிர்வாகம் கேட்கவில்லை. ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தார். இதனையடுத்து நிர்வாகத்தின் பரிந்துரையை ரத்து செய்து நலத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் நாடியிருந்தது. தொழிலாளர் நலத்துறையால் தங்களது பரிந்துரை நீக்கப்பட்டது தவறு என்றும், தாங்கள் எடுத்த நடவடிக்கையை சரி என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நிறுவனம் கோரியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் இன்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பணியிடத்தில் பெண்கள் விரும்பாத, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்வது மட்டுமல்ல, அவர்களை அப்படி உணர வைக்கும் வகையில் பேசுவதும் கூட பாலியல் துன்புறுத்தல்தான். எனவே, சம்பந்தப்பட்ட மேனேஜருக்கு எதிராக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் செல்லும். நிர்வாகத்தின் பரிந்துரையும் செல்லும்” என்று கூறி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தற்போது தொழிலாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்த உத்தரவின் மூலமாவது இனியும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Leave a Response