கீரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் விளக்கம்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்திருக்கும் நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம், அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறது.

ஆயுர்வேத கசாயம் என்று கூறி, 23 வயது இளைஞர் ஷரோன் ராஜை கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மா மற்றும் உறவினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்த நீதிமன்றம், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், உறவினருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளது.

இன்று காலை நீதிமன்றம் கூடியதும், தண்டனையை பிறப்பித்த நீதிமன்றம், “பாலியல் ரீதியாக நெருக்கம் காட்டுவது போல நடித்து ஷரோனை வீட்டுக்கு அழைத்து, பின்னர் குற்றம் செய்திருப்பதை ஒருபோதும் புறந்தள்ள முடியாது. குற்றச் செயல்களுக்கு தண்டனையை உறுதி செய்வது அரசின் பொறுப்பு.

கசாயம் கொடுக்கும் போது, அதனை ஷரோன் செல்போனில் பதிவு செய்த போது, அதனை பதிவு செய்ய வேண்டாம் என்று கிரீஷ்மா கேட்டுக் கொள்வதும் பதிவாகியிருக்கிறது. இந்த விடியோவை ஷரோன் பதிவு செய்தபோதே, ஏதோ தவறாக நடக்கிறது என்று அவர் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும் என்பது விடியோ சாட்சியம் மூலம் தெரிய வந்துள்ளது. கிரீஷ்மா கொடுத்த விஷத்தால், ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 11 நாள்கள் உயிருக்குப் போராடினார் ஷரோன் ராஜ்” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிரீஷ்மா தனது காதலன் ஷரோனுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அவரை காதல் எனும் உணர்வுப்பூர்வமாகக் கையாண்டு, கொலை செய்திருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், ஷரோன், கிரீஷ்மாவை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை, அதுபோலவே ஷரோன் தன்னை உடல்ரீதியாக வன்கொடுமை செய்ததாக கிரீஷ்மாவின் தரப்பு வாதத்துக்கும் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, ஷரோன் உயிருக்குப் போராடிய நேரத்திலும் கூட விசாரணையின்போதோ, உறவினர்களிடமோ, கிரீஷ்மா மீது குற்றம்சாட்டவில்லை. மேலும் ஷரோன் குற்றம் சாட்டப்பட்டவர் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார், கொலை செய்த அதே நேரத்தில் கிரீஷ்மா, தனது வருங்கால கணவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“குற்றம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, எவ்வித சூழ்நிலை காரணமாக ஆத்திரத்தில் நடத்தப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது. கிரீஷ்மா தனது குற்றத்தை மறைக்க தந்திரமாக பல முயற்சிகள் எடுத்தும் அவை தோல்வியடைந்தன. அவரது இளமை வயது என்ற வாதத்தை குற்றத்தின் தீவிரத் தன்மையைப் பார்க்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது.

அதுபோலவே, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த சாட்சியங்கள், கிரீஷ்மாவின் கொலை திட்டம் எதுவுமே ஷரோனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என்றும் கூறியிருக்கிறது.

குற்றவாளி கிரீஷ்மா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஐபிசி பிரிவு 302 (கொலை), 364 (கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தல்), 328 (உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் விஷம் கொடுத்தல்) மற்றும் 203 (தவறான தகவல்களை அளித்து நீதியைத் தடுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Response