தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுவின் ஆட்சி காலம் வருகிற 2026ம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்க சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என ஐந்து முனை போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுகவும், திமுக ஆட்சியை அகற்றி அறியணையில் ஏற அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ராபின் சர்மா நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார யுக்திகளை வகுக்க ராபின் சர்மாவின் SHOWTIME CONSULTANCY நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. ராபின் சர்மாவின் SHOWTIME நிறுவனம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கும், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும், மகாராஷ்டிராவில் சிவ்சேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்கும் தேர்தல் யுக்திகளை வகுத்து கொடுத்தது குறிப்பிடதக்கது.