தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.
அப்போதுதான் தன்னுடைய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் கொள்கை தலைவர்கள் போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக தாஹிரா இருக்கிறார். இவருடைய தலைமையில் நேற்று நாம் தமிழர் கட்சியிலிருந்து 250 பேர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் துண்டினை அணிந்து கட்சியில் சேர்த்துக்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மக்கள் பணி செய்வதற்காக தான் விஜய் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார் எனவும் விரைவில் மக்களை சந்திப்பார் என்றும் கூறினார். அவரிடம் நிருபர்கள் எப்போது என்று கேட்ட நிலையில் அதனை தலைமை தான் முடிவு செய்யும் என்றும், ஆனால் கண்டிப்பாக விஜய் மக்களை சந்திப்பார் என்றும் விரைவில் அது பற்றிய முறையான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் கூறினார்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று முன்னதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக தாஹிரா விரைவில் விஜய் மக்களை சந்திப்பார் என்று கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் விரைவில் சூறாவளி பயணம் மேற்கொள்வார் என்று உறுதியாகியுள்ளது.