ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டது விசிகவின் முடிவு. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் தரவில்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அழுத்தம் தரவேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. மன்னராட்சி மனநிலை தமிழகத்தில் இல்லை. மக்களை சந்தித்துதான் பதவிக்கு வந்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். ஆனால் விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அப்போது அரசியல் பேச வேண்டாம் என அறிவுறுத்தியும் ஆதவ் அர்ஜுனா அரசியல் பேசியதாக விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சித் தலைமையின் நடவடிக்கையினை காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாக பயணிக்கிறேன். தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்’ எனத் தெரிவித்திருந்தார்.