சென்னையில் வருகிற 27ஆம் தேதி புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. அதன்படி வருகிற டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பபாசி அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜய், திமுகவை கடுமையாக சாடி பேசினார். குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வதே இலக்கு என்று கூறியிருந்த நிலையில் இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று கூறுகிறார்கள் எனவும் 2026 ஆம் ஆண்டு மக்கள் அவர்களை மைனஸ் ஆக்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
அதன்பிறகு சமூகநீதி பேசும் திமுக அரசு வேங்கை வயல் சம்பவத்திற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றார். இதேபோன்று முதல் மாநாட்டின் போது கூட குடும்ப ஆட்சி செய்யும் அரசு என்ற திமுகவை சாடி பேசியிருந்தார். தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் விஜய் தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் புத்தகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக வந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இது சாத்தியமானால் தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் திமுகவினரின் ரியாக்சன் எப்படி இருக்கும், தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் எவ்வாறு சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.