சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து மேரி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு லூர்து மேரி தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் பழனி மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். போலீசார் கைது செய்த போது பழனி தனது அடையாளத்தை மறைத்து தான் பன்னீர்செல்வம் என கூறியுள்ளார். பன்னீர்செல்வம் என்பது அவரது அண்ணன் பெயர். கடந்த 2009-ஆம் ஆண்டு போலீசார் விரிவாக விசாரணை நடத்தாமல் பன்னீர்செல்வம் பெயரிலேயே பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை மகிளா நீதிமன்றம் போலியான பன்னீர் செல்வத்திற்கு ஐந்து ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. அதனையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடம்பாக்கம் போலீசார் ஒரிஜினல் பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போதுதான் பன்னீர்செல்வம் குற்றவாளி இல்லை என்பதும், பழனி தனது அண்ணன் பெயரை பயன்படுத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது. இருவரும் பார்ப்பதற்கு ஒரே முக ஜாடையில் இருப்பதாக தெரியும். இத்தனை ஆண்டு காலம் பழனி தான் பழகும் எல்லோரிடமும் தன்னை பன்னீர்செல்வம் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். தான் காதலித்து திருமணம் செய்த மனைவி லூர்து மேரியிடமும் தனது பெயர் பன்னீர்செல்வம் என்று தான் கூறியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழனியின் புகைப்படத்தை வைத்து போலீசார் அவரை கண்டுபிடித்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.