ஜார்க்கண்டின் குந்தி மாவட்டம், ஜோர்தாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா, 25. இவருக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் தமிழகம் வந்தனர். இங்கு, கசாப்பு கடை ஒன்றில் இறைச்சி வெட்டும் பணியில் நரேஷ் சேர்ந்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர்.ஒருகட்டத்தில் ஜார்க்கண்டில் உள்ள சொந்த கிராமத்துக்கு தனியாக திரும்பிய நரேஷ், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணை கிராமத்திலேயே விட்டுவிட்டு தமிழகம் திரும்பினார்.
திருமணம் ஆன விஷயத்தை காதலியிடம் சொல்லாமல் மறைத்தார். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என, காதலி தொடர்ந்து வற்புறுத்தியதால், இருவரும் கடந்த 8ம் தேதி குந்தி மாவட்டத்துக்கு வந்தனர்.காதலியை வீட்டுக்கு அழைத்து செல்லாமல், ஜோர்தாக் கிராமம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு நரேஷ் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து, அவரது கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்தார். பின், இறைச்சி வெட்டும் கத்தியால் காதலியின் உடலை 40 – 50 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசினார்.
பின், வீடு திரும்பி மனைவியுடன் இயல்பாக இருந்துள்ளார்.இந்த கொலை நடந்து 15 நாட்களுக்கு பின், ஜோர்தாக் கிராமத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று வெட்டப்பட்ட மனித கையை கவ்வியபடி சென்றுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் போலீசில் தெரிவித்தனர். போலீசார் காட்டுப்பகுதியில் சோதனையிட்ட போது, மனித உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அந்த இடத்தில் கிடந்த பெண்ணின் கைப்பையில் இருந்து அவரது ஆதார் அட்டை உள்ளிட்ட உடைமைகளை போலீசார் கைப்பற்றினர்.பெண்ணின் தாய் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெண்ணின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் தாய் நரேஷ் மீது சந்தேகம் தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். குற்றத்தை நரேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.