கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் பகுதியில் கைலாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவன் மஞ்ச குப்பத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கைலாஷ் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கைலாஷ் கீழே விழுந்து பேருந்தில் பின் பக்க சக்கரத்தில் சிக்கினார். இதனால் தலை நசுங்கி கைலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தயுள்ளனர். படிக்கட்டில் நின்று பயணம் செய்வது உயிருக்கே ஆபத்தாக அமையும் என போலீசார் சக மாணவர்களுக்கு விளக்கினர். அந்த நிகழ்ச்சியில் கைலாசின் தந்தையும் கலந்து கொண்டார். அவர் மகனின் வகுப்பு தோழர்களிடம் பேச முடியாமல் காலில் விழுந்து “பார்த்து போங்கப்பா.. படியில் தொங்க வேண்டாம்” என கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது.