ரஜினியை சந்தித்ததால் நான் சங்கி என்றால்? நீங்கள் யார்? – திமுகவிற்கு சீமான் கேள்வி!

ரஜினியை சந்தித்ததால் சீமானை திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் ‘சங்கி’ என்று காட்டமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு விமர்சித்து வரும் நிலையில், பிரபாகரன் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய சீமான் அதற்கெல்லாம் காட்டமாக பதிலளித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், ‘நான் ரஜினிகாந்தை சந்தித்த ஒரே காரணத்திற்காகவே சங்கி ஆகிவிட்டேன் என்றால், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரஜினியை அருகே அழைத்து உட்கார வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் எல்லாம் யார் ? சங்கி இல்லாம சிங்கியா ? இல்ல அதுக்கு பேரு என்ன ? அங்கி, லுங்கியா? இல்ல சொங்கியா? இல்ல என்னது அது ? அதுக்கு பேர் என்ன ? எப்படி நீ ரஜினிகாந்த போயி… உன்ன கேட்டு கேட்டுதான் போகனுமா ? உன்ன கேட்டுதான் நான் தண்ணி குடிக்கனும், உன்ன கேட்டுதான் சிறுநீர் கழிக்க வேண்டுமா ? பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால் சுவற்றில் நாக்கை போட்டு நக்கிக்கொண்டு இரு, வெறி வருதா இல்லையா ? என்னைய கேட்காம என் மனைவியை எப்படி கையை பிடித்து இழுக்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்கள். வெறி ஆகுதா இல்லையா ? ஏ, எனக்கு தெரியும்டா என்ன செய்றது என்று, நான் ரஜினிகாந்தை சந்தித்தது உடனே என்னை சங்கி ஆகிட்டாரு, ஆர்.எஸ்.எஸ் ஆகிட்டாரு, அப்டியே போய்ட்டாரு என்கிறீர்களே, காலையில் நீங்களும் மாலையில் மகனும் போய் மோடியை பார்த்தீர்களே அங்க சங்கி வரலையோ ? அது சங்கி இல்லையா ? சதுரங்க விளையாட்டா.. ஐயா வாங்க, கேலோ இந்தியாவா.. ஐயா வாங்க.. அங்க சங்கி இல்ல ?’ என காட்டமாக தடித்த வார்த்தைகளில் சீமான் பேசியுள்ளார்.

அதே நேரத்தில் தனக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆஃபர் கொடுப்பதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் பணம், குடும்பத்திற்கு தனி செட்டில்மெண்ட், 2026 முதலமைச்சர் ஆவதற்கு உதவி என எல்லாம் செய்வதாக கூறி வருகிறார்கள் என்றும் ஆனால் தான் பிரபாகரனின் தம்பி என்பதால் அவர் படத்தை பார்த்து, அவற்றையெல்லாம் நிராகரித்து வருவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தான் தனியே புது உத்தி வைத்திருப்பதாகவும் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் தன்னை எதிர்த்து அந்த நேரத்தில் நிற்க முடியாது எனவும் பேசியுள்ள சீமான், உளவுத்துறை மூலம் திமுக தன்னுடைய கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னையும் தனது கட்சியையும் உடைப்பதற்கு தான் ஒன்றும் சிலேட்டு குச்சி இல்லை என்றும் பேசியுள்ள சீமான், தன்னுடைய கட்சியில் இருக்கும் துரோகிகளை களையெடுத்து திமுக தனக்கு உதவி செய்து வருகிறது என்றும் அதற்காக தன்னுடைய நன்றியை சொல்லிக்கொள்வதாகவும் அந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

Leave a Response