கோவை மாவட்டம், துடியலுாரில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தமிழ் என்ற வாலிபரை, இருவர் நேற்று காலை, சரமாரியாக கத்தியால் குத்தி, டூ – வீலரில் தப்பினர்.
சில நிமிடங்களில் அவர் இறந்தார். துடியலுார் போலீசார் விசாரித்தனர். ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு, தப்பி சென்ற இருவர் குறித்து கட்டுப்பாட்டு அறை மூலமாக கோவை, திருப்பூர் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.அவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்துக்குள் வருவது போலீசாருக்கு தெரிந்தது. பல்லடம் வழியாக மேட்டுக்கடை நோக்கி சென்ற இருவரையும், குண்டடம் ஸ்டேஷனை சேர்ந்த போலீசார் பிடித்து துடியலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட தமிழ், நான்கு மாதங்களுக்கு முன் ஆனந்தவள்ளி என்பவரை காதல் திருமணம் செய்தார்.
இது, தமிழின் தாய்க்கு பிடிக்கவில்லை. சில வாரங்களில் அப்பெண்ணை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். மனமுடைந்த அப்பெண், இரு மாதம் முன், விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் துாக்கிட்டு இறந்தார்.மகளின் இறப்புக்கு காரணமான தமிழை பழிவாங்க தந்தை மலைக்கனி, 47, திட்டமிட்டு இருந்தார். நேற்று காலை தன் மகன் ராஜாராம், 25, என்பவருடன் தமிழை கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பினர். அவர்களை கைது செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.