விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சஞ்சய் என்பவர் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த நிலையில், இவரது ஆதரவாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஸ்ரீதர் என்பவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்கனவே கோயில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.
இதனால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும், இரு குழுக்களாகப் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காயம் அடைந்த ஸ்ரீதர் உள்பட தவெக நிர்வாகிகள் 3 பேர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து, இவர்களைப் பார்ப்பதற்கு பாரதிராஜா என்பவர் மருத்துவமனைக்கு வந்து உள்ளார்.
இவரும் தவெக நிர்வாகி ஆவார். அதேநேரம், சஞ்சய் உள்பட மற்றவர்களைப் பார்க்க திமுக கவுன்சிலர் முருகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து உள்ளனர். அப்போது, பாரதிராஜா, முருகவேலை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
பின்னர், இது கைகலப்பாக மாறி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பாரதிராஜாவை முருகவேல் தரப்பினர் சரமாரியாக அடித்து, புரட்டி எடுத்து உள்ளனர். இந்த மோதல் போலீசாரின் கண்முன்னே நிகழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகப் பகுதி மிகவும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.
பின்னர், இது குறித்து அறிந்து வந்த காவல் நிலைய போலீசார், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.