கோவை கருமத்தம்பட்டி அருகே வாகரையாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அமிர்தராஜ் (43). இவரது மனைவி விஜயாலட்சுமி . இவர்கள் சத்தியமங்கலத்தில் வசிக்கும் பொழுது வாகரையாம்பாளையம் பகுதியில் ஒரு விட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். வீட்டை பார்க்க அமிர்தராஜ் அடிக்கடி வாகரையாம்பாளையம் செல்லும் பொழுது கலைவாணி(39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த அமிர்தராஜின் மனைவி விஜயலட்சுமி, தன் கணவன் மற்றும் கள்ளக்காதலியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தராஜ், கடந்த 2019ம் ஆண்டு விஜயலட்சுமியை கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு லாரி மோதி இறந்ததாக வழக்கு பதிவு செய்து போலீஸை நம்பவைத்துள்ளார். போலீசாரும் லாரி மோதி இறந்ததாக வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், விஜயலட்சுமி பெயரில் ஆயுள் காப்பீட்டு செய்து இருந்த காப்பீட்டு தொகை 15 லட்சம் ரூபாயும் அமிர்தராஜ் பெற்றுக்கொண்டு வாகரையாம்பாளையத்திற்கு குடி பெயர்ந்து விட்டார்.கூடவே தன்னுடன் கள்ளக்காதலி கலைவாணியும் அழைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அமிர்தராஜ் வீட்டில் வாடகைக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த இளங்கோவன் (42) என்பவரை மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி, கழுத்தை அறுத்து கொலை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்தது அமிர்தராஜ் மற்றும் கள்ளக்காதலி கலைவாணி என தெரியவந்தது. மேலும் அமிர்தராஜ் வைத்த கூலிப்படையினர் தான் இளங்கோவனை கொலை செய்தனர் என தெரியவந்தது. இதில் அமிர்தராஜையும் கலைவாணியையும் கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இக்கொலையில் மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த மைக்கேல் புஷ்பராஜ், ஆரோக்கியசாமி, வீராசாமி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களையும் தனிப்படையினர் நெருங்கி விட்டனர் என தெரிவித்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு விஜயலட்சுமி யை திட்டமிட்டு கொலை செய்ததும் தற்போது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த வழக்கையும் தற்போது கொலை வழக்காக மாற்றி, மறு விசாரணை செய்து வருகின்றனர்.
விஜயலட்சுமியை இளங்கோவன் தான் கூலிப்படை வைத்து கொலை செய்ததும். அதற்காக அடிக்கடி அமிர்தராஜிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அமிர்தராஜ் வீட்டிலேயே குடும்பத்துடன் வாடகை கொடுக்காமல் இளங்கோவன் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அமிர்தராஜ், இளங்கோவனை வீட்டை காலி செய்யச் சொல்லி கூறி இருக்கிறார். அதற்கு இளங்கோவன் விஜயலட்சுமி கொலை பற்றி வெளியே சொல்லி விடுவேன் என்று இளங்கோவன் மிரட்டி உள்ளார்.
அதனால் இளங்கோவனைகொலை செய்ய வேறொரு கூலிப்படையை அமிர்தராஜ் அணுகி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரையும் விரைவில் பிடிப்போம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.