பிறந்த சிசுவை குளத்தில் தூக்கி எறிந்த தாய்! – செங்கல்பட்டில் பரபரப்பு!

அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்ஃபுதீன். இவரது மகள் ஷகீனாபேகம் (22). ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அசாமில் இருக்கும் போதே அதே மாநிலத்தை சேர்ந்த சுமன் (25) என்ற இந்து வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஷகீனா பேகம், சென்னைக்கு வந்ததும் சுமனும் இங்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஷகீனா பேகத்துடன் நெருக்கமாக இருந்தார் சுமன்.

இதில் ஷகீனா பேகம் கர்ப்பமானார். அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவ்வப்போது ஷகீனா பேகம் வற்புறுத்தியுள்ளார். சுமனும், தள்ளிபோட்டு கொண்டே சென்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஷகீனா பேகத்துடன் சில மாதங்களாக பேசுவதை சுமன் தவிர்த்து வந்தார். இதனால் ஷகீனா பேகம் விரக்தியடைந்தார். இந்நிலையில் திடீரென சுமனை காணவில்லை. அவருக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. அதனால் அவர், அசாமுக்கு சென்றிருக்கலாம் என நினைத்து அங்கு சென்று பல இடங்களில் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் ஷகீனாபேகம் சென்னை வந்து விட்டார். விடுதியில் தங்கியிருந்து கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில் கர்ப்பம் குறித்து விடுதியில் உள்ளவர்கள் கேட்டபோதெல்லாம், ‘காதலனை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன்’ என்று ஷகீனா பேகம் சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று விடுதியில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ஷகீனாபேகம், வேலைக்கு செல்லவில்லை. பிற்பகலில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விடுதியில் யாரும் இல்லாததால் தனி அறையில் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் யாருடைய துணையும் இன்றி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பலத்த ரத்த போக்கு ஏற்பட்டது. ஷகீனா பேகம் மயங்கி விட்டார். சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு ஷகீனா பேகம் எழுந்தார். அறை முழுவதும் ரத்தம் இருந்ததாலும் குழந்தை அழுது கொண்டே இருந்ததாலும் அதிர்ச்சியில் உறைந்த அவர், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தார். பின்னர், குழந்தையை எங்கேயாவது தூக்கி போட்டு விட முடிவு செய்தார். அதன்படி குழந்தையை விடுதியின் பின்புறம் உள்ள குளத்தில் வீசியுள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த குழந்தை மூச்சு திணறி இறந்தது.

மாலையில், வேலை முடிந்து சக தோழிகள் விடுதிக்கு வந்தனர். அவர்கள், ஷகீனா பேகத்திடம் விசாரித்தனர். அப்போதுதான் குழந்தை பிறந்த விவரம் மற்றும் குளத்தில் வீசிய சம்பவத்தையும் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சக தோழிகள், உடனடியாக குளத்துக்கு சென்று வீசப்பட்ட பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் தாயையும், சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஷகீனா பேகத்திடம் புகாரை பெற்று அவரது விருப்பப்படி இஸ்லாமிய முறைப்படி செங்கல்பட்டு நவாப் ஜாமியா பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Response