சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல விவாதங்களுக்கு உள்ளாகியது. இது ஒருபுறம் பலரின் பாராட்டைப் பெற்றாலும், மறுபுறம் சில விமர்சனங்களையும், எதிப்பையும் எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக இந்த திரைப்படம் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த எதிர்ப்பின் முக்கிய காரணங்கள், படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இது இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியதுதான். மேலும் படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இது மதக் கலவரங்களை தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதன்காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகளில் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமரன் திரைப்படம் திரையிடல் நிறுத்தப்பட்டது. படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. அமரன் திரைப்படம் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளதாகவும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் விஜயா திரையரங்கம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒருபுறம் இருக்க மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜயா திரையரங்கத்தின் முன்பு எஸ்டிபிஐ கட்சியினரின் எதிர்ப்பு போராட்டம் குறித்த தகவல் அறிந்த இந்து எழுச்சி பேரவையினர் மற்றும் பாஜகவினர் திரையரங்கத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக தேசியக்கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சிக்கு எதிராக பேரவையின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு வந்த டிஎஸ்பி திருப்பதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரைப்படம் திரையிடப்பட்டது.