விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், ”விஜயகாந்த் கட்சி வந்த போது சொன்னார்கள், இந்த கட்சி எல்லாம் காணாமல் போய்விடும். இப்போது விஜய் வந்த உடன் பயங்கரமான ஹைப் கொடுக்கப்படுகிறது. நமது மாநாட்டிற்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள். இது குறித்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோ கூட இல்லை திருமாவளவன், எப்படி இத்தனை லட்சம் பேரை ஈர்க்க முடிந்தது என யாராவது விவாதித்தார்களா? விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள், அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்ஆர்கானிக் மாஸா?
மாநாட்டிற்கு வர பணம் கொடுத்தோமா? காசு கொடுத்தோமா? பிரியாணி கொடுத்தோமா? என்ன செய்தோம்? அவர்களாக குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு வந்தார்கள். இரண்டு லட்சம் பெண்கள் மாநாட்டில் பங்கேற்றார்கள். யாராவது அதைப் பற்றி பேசினார்களா?
எவ்வளவு பெண்கள் வந்தார்கள் என்று பேசினார்களா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என்று யாராவது விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று சொன்னார்களா? சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. யாரும் சொல்ல வேண்டாம். இதுதான் இந்த சமூகம்.
இப்படி தான் அவர்கள் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்வார்கள். எல்லோரும் நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறார்கள். இவங்களை ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள் என்று நினைக்கின்றனர்.
நான் அடிக்கடி சொல்வேன். யாரும் புதிய புதிய கட்சிகளை துவங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு போட்டியாளராக இருக்க முடியாது.
நமது களம் முற்றிலும் வேறானது. இந்த களத்தில் யாரும் நம்முடன் போட்டிக்கு வர முடியாது. நம்மால் மட்டுதான் இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் இன்னும் விழிப்பாக இருப்போம். சமூக ஊடகங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில், நாம் அவசரப்பட்டு எதையும் செய்து விட கூடாது.
எங்க போனாலும் மைக் எடுத்துட்டு வந்து, ‘சார் நீங்க விஜய்யுடன் போறீங்களா? இ.பி.எஸ்., உடன் போறீங்களா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ஒரு தடவ சொன்னா உனக்கு புத்தி வரணும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; எங்கள் கூட்டணி, நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. விஜய்க்கு எதுக்கு இவ்வளவு ஹைப்? நம் மாநாட்டிற்கு லட்சக்கணக்கானோர் வந்த போது அதனைத் திரும்பத் திரும்பக் காட்டினார்களா?”என திருமாவளவன் பேசினார்.