ராகுல் காந்தியுடன் கை கோர்க்கிறாரா விஜய்?

ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பாக அதற்கு அச்சாரமிடும் ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசுக்கு நெருக்கடி தந்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர். இதில், மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தீர்மானம்தான். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்ததோடு நிற்காமல் திமுக அரசுக்கும் நெருக்கடி தந்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பாக அதற்கு அச்சாரமிடும் ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி உள்ளார் விஜய். அந்த தீர்மானத்தில், “சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்புலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். பீகாரில் நிதிஷ் குமார் – லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தப்பட்டது. (நிதிஷ் குமார், தற்போது பாஜக கூட்டணியில் உள்ளார்)

இதேபோன்ற ஒரு ஆய்வை தமிழ்நாட்டில் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தவெக. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியான சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்திருப்பதன் மூலம் ராகுல் காந்தியுடன் விஜய் இணக்கமான உறவை பேண விரும்புகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Response