விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ளது.
அரசியலில் இறங்கியுள்ள விஜய், முதன்முதலாக தன் கட்சி மாநாட்டை விக்கிரவாண்டியில் நாளை நடத்துகிறார். இதற்காக, போலீஸ், மின் வாரியம் என பல துறைகளிலும் அக்கட்சியினர் அனுமதி வாங்க போராட வேண்டிஇருந்தது.இதற்கு, ஆளும் தி.மு.க., அரசு தான் காரணம் என்று அக்கட்சியினர், அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.அதேசமயம் தொண்டர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக, இதுவரை மூன்று முறை விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்., 4ல், விக்கிரவாண்டி சாலையை குறிப்பிட்டு, ‘வெற்றிச்சாலை’ என்றும்; அக்., 20ல், ‘விவேக சாலை’ என்றும்; நேற்று, ‘வியூகச்சாலை’ என்றும் குறிப்பிட்டு, ‘2026 சட்டசபை தேர்தல் தான் நம் இலக்கு’ என்ற ரீதியில் கடிதம் எழுதி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.இதற்கிடையே, மதுரையில் விஜய் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ‘அக்., 27ல் மன்னராட்சிக்கு முடிவு; தளபதியால் மக்கள் ஆட்சிக்கு விடிவு. நீங்கள் மட்டுமே நடமாடும் முதல்வர், விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டிக்கு அழைக்கிறார்’ என போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.